ந.பிரதீப்
நான் துப்பாக்கிகளை நேசிக்கிறேன். அவற்றை கொண்டாடுபவனாக இருக்கிறேன். துப்பாக்கிகள் குறித்து நண்பர்களோடு சிலாகிக்கும்போது பூரிப்படைகிறேன். மிக அமைதியான இராத்திரிகளை காதலியோடு கடப்பதைப்போல என் துப்பாக்கியை தொட்டுத்தடவி பேசியபடியே கடந்திருக்கிறேன். அந்த இராத்திரிகள் ரம்மியமானவை.
கூடவே அதிபயங்கரமான இராத்திரிகளையும் கடந்திருக்கிறேன் அப்போதெல்லாம் என் துப்பாக்கியின் மரப்பிடியினை ஒரு நல்ல நண்பனின் உறுதியான கைகளை நம்பிக்கையோடு பற்றிக்கொள்வதைப்போல பற்றிக்கொண்டு கடந்திருக்கிறேன்…
என் #தேசத்தில் நான் அதிகம் உற்சாகத்தோடு இருந்த நாட்கள் என் துப்பாக்கியோடு இருந்த நாட்கள் தான். அதிகம் சோம்பேறித்தனத்தோடுடிருந்த நாட்களிலும் என் துப்பாக்கி என்னோடிருந்தது. போர் வெற்றிகளில், தாயகத்துக்கான விடுதலைப்போராட்டத்தில் போராளியென்ற தவிர்க்கமுடியாத சந்தோசத்தில் உற்சாகத்தோடிருந்த போதும் போர் தின்ற என் தேசத்தின் இளையவர்களின் உயிரற்ற புனித உடல்களைப்பார்க்கும் போது போர்மீதான சோம்பேறித்தனம் குடிகொண்டு விடுகிறது. எப்படி இருந்தாலும் துப்பாக்கி மீதான நேசம் குறைவதில்லை. இந்த துப்பாக்கிக்குத் தான் ஒரு குழப்படிக்கார மாணவனை புரட்சியாளனாக்க முடிந்தது.
துப்பாக்கியோடிருந்த நாட்களில் என்னுடைய உரிமை என்னிடம் தான் இருந்தது.
துப்பாக்கியோடிருந்த நாட்களில் என்னுடைய நிலம், என்னுடைய காடு, என்னுடைய கடல், என்னிடம்தான் இருந்தது. இதற்கெல்லாம் மேலாக அந்நாட்களில் என்னுடைய சுய மரியாதை என்னிடம் இருந்தது என்னுடைய துப்பாக்கியும் என்னிடம் தான் இருந்தது.
துப்பாக்கி குறித்த உங்களுடைய புரிதல்கள் மிகப்புதினமானவை அவற்றில் அதிகமானவை தவறான புரிதல்கள். என்னுடைய துப்பாக்கியின் குறிகாட்டியின் ஊடாக பார்க்கும்போதெல்லாம்
எதிரியின் மார்பிற்கு நான் குறி வைத்ததில்லை மார்பிற்குப்பின்னால் தெரிகின்ற தேசியமும் எனக்கடுத்த தலைமுறையின் எதிர்காலமும்தான் குறியாகவும் குறிக்கோளாகவும் இருந்தது.
என்னுடைய துப்பாக்கி ஒவ்வொரு வேட்டுக்களைத்தீர்க்கும் போதும் தனதான மரப்பிடியினால் என்னுடைய
தாங்கிப்பிடிக்கின்ற தோள்மூட்டுகளில் உதைத்துச்சொல்லும் சுடுதல் தவறுதான் ஆனால் உன்னைச்சுடும் போது சுடாமாலிருத்தல் தான் மிகப்பெரிய தவறென்று.
என்னுடைய துப்பாக்கியின் சுடுகுழல் மிகப்பளிச்சென்று இருக்கும் அது சுடுதலின் போது மட்டும்தான் சூடாக இருக்கும் தவிர ஏனைய பொழுதெல்லாம் சில்லென்று குளிராய் இருக்கும் என் தேசத்தின் வயல்க்காற்றைப் போல.
என்னுடைய துப்பாக்கியின் விசையழுத்தி (ரிகர்) யை நீங்கள் யாரும் அழுத்திப்பார்த்திருக்க சந்தர்ப்பமில்லை. அதை யாரும் அவ்வளவு இலகுவில் அழுத்திவிட முடியாது. ஆனால் அதை அழுத்துதல் அத்தனை பெரிய கடினமான காரியமுமல்ல. அதைப்போலவே தான் எங்களுடைய தேசியப்பிரச்சினைக்கான தீர்வும். அதை யாரும் அவ்வளவு இலகுவில் பெற்றுவிட முடியாது. ஆனால் அதை கொடுப்பதொன்றும் அத்தனை பெரிய கடினமான காரியமுமில்லை.
என் கைகள் பேனை பிடிக்க வேண்டிய நேரத்தில் துப்பாக்கியைப்பிடித்திருந்தது அது எனக்கு பிடித்திருந்தது. அப்போது என் கைகள் மிருதுவாய் இருந்தன. என் கைகள் துப்பாக்கி பிடிக்க வேண்டிய நேரத்தில் பேனையை பிடித்துக்கொண்டிருக்கிறது. இது எனக்கு பிடிக்கவேயில்லை ஆனால் என் கைகள் இப்போது மறமறப்பாக முரட்டுத்தனமாவுள்ளன
துப்பாக்கியை வெறுத்தீர்கள். துப்பாக்கியை காட்டிக்கொடுத்தீர்கள். என்னுடைய துப்பாக்கிக்கு எந்தச்சிறுமியையும் வன்புணர்வு செய்யத்தெரியாது. அது எவரையும் நிர்வாணம் ஆக்கி முழந்தாளிடச்செய்து பிடரியில் சுடாது. தகப்பன் மீதுள்ள கோபத்தை குழந்தைகளின் மார்பில் குண்டு பாய்ச்சி தீர்த்துக்கொள்ளாது..
என்னுடைய துப்பாக்கியை
நீங்கள் நேசிக்காதீர்கள்,
அதிகபட்சம் வெறுக்காதிருங்கள்..
என்னுடைய துப்பாக்கியின் வரலாற்றை
யாருக்கும் சொல்லவேண்டியதில்லை,
நிச்சயமாக மறக்காதிருங்கள்…
The post துப்பாக்கி appeared first on Sri Lanka Muslim.